mobirise.com

     

        
கற்றுக்கொள்ள ஓரிடம்

ஒளிப்பதிவு
காணொளி
புகைப்படம்
&
ஒளியமைப்பு

வணக்கம் நண்பர்களே..

எனது வலைப்பூவில் நான் தொடர்ந்து எழுதிவரும், சினிமா ஒளிப்பதிவு சார்ந்த கட்டுரைகளை வாசிக்கும் நண்பர்கள் பலரும் பல சந்தர்ப்பங்களிலும் முன்வைக்கும் கோரிக்கைதான், ஒளிப்பதிவு குறித்தான பயிற்சிப் பட்டறைகளை நடத்துங்கள் என்பது. இது சில பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கை இருந்துவருகிறது. அப்படி நடத்தும் ஆர்வம் எங்களுக்கும் இருந்தாலும், சில காரணங்களால் அதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தோம். ஆனால், சில மாதங்களுக்கு (Nov 2015) முன்பு அதை நடத்துவதற்கான முதல் வாய்ப்பும், நேரமும் கூடிவந்தபோது அதைப் பயன்படுத்திக்கொள்ளவும் தயங்கவில்லை, அந்த இரண்டு நாள் பட்டறையை நன்முறையில் நடத்தியும் முடித்தோம்!

அந்த பயிற்சி வகுப்பில் பலரும் ஆர்வமாகக் கலந்துகொண்டார்கள். கலந்துகொண்டவர்களில், வெவ்வேறு துறை சார்ந்தவர்களும் இருந்தது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. விஷுவல் கம்யுனிகேஷன் படிப்பவர்கள், இன்ஜினியரிங் படிப்பவர்கள், கணினித் துறையில் வேலை செய்பவர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குனர்கள் மட்டுமல்லாது ஆட்டோ ஓட்டுனர், தச்சு வேலை செய்பவர், கல்லூரி ஆசிரியர் என வேறு துறை சார்ந்தவர்களும் ஆர்வமாக கலந்துகொண்டார்கள். அமெரிக்காவில் கணினி வேலை செய்பவரும், பெங்களூரில் இருந்தும், இலங்கையிலிருந்தும் இப்பயிற்சிக்காகவே சென்னை வந்து கலந்துக்கொண்டவர்களும் உண்டு. தற்போது திரைத்துறையை அரசாளும் டிஜிட்டல் வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள மிக ஆர்வமாக இருந்தனர் அவர்கள். 

‘இப்பயிற்சி வகுப்பு தங்களுடைய திரைப்படக் கனவை நனவாக்க எல்லா நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது, மிகவும் பயனுள்ள ஒரு வகுப்பு இது’ என்று அவர்கள் சொன்னபோது, இப்பயிற்சி வகுப்பை நடத்தியதற்காக நிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்தோம். 

திரைப்பட ஆக்கத்தில் மிக முக்கியமான ஒரு பிரிவு ஒளிப்பதிவுத்துறை. ஒளியில் ஆரம்பித்து கருவிகள் வரை, பல விஷயங்கள் கற்றுக்கொள்ள இருக்கின்றன. நுணுக்கங்கள் ஒருபுறம், படைப்பாளுமை மறுபுறம். கற்பனை ஒருபுறம், தொழில்நுட்பங்கள் மறுபுறம். அழகியல் ஒருபுறம், உணர்வுகள் மறுபுறம் என பலவற்றை உள்ளடக்கிய துறை இது.

எதை எப்படி சொல்லித்தருவது..? எதை விடுவது..? பாடங்களை, அங்கே பலகையில் எழுதி சொல்லித்தரலாமா? அச்சிட்டு தரலாமா? அல்லது காட்சி வடிவமாக தயாரிக்கலாமா? என பல யோசனைகள். படித்ததை, அனுபவத்தில் அறிந்துக்கொண்டதை ஒரு பாடத்திட்டம் போல மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. எதைச் சொல்வது..?, அதை எப்படிச் சொல்வது..?, எவ்வளவு சொல்வது…? தற்போது அது பயன்படுமா..? போன்ற பல கேள்விகளை எழுப்பி, அதற்கு ஏற்றாற்போல் பாடங்களைத் தயாரித்தோம். காட்சி ஊடகம் என்பதனால், பல காணொளிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். ஒவ்வொரு பாடத்தைப்பற்றியும் விளக்கங்களும், உதாரணங்களும் கொண்ட காணொளிகளை சேகரித்துக்கொண்டோம். பாடங்களை, Slide Show (PPT) -ஆகவும் தயாரித்துக் கொண்டோம். 

முதல் நாள், புகைப்படத்துறையில் ஆரம்பித்து ஒளிப்பதிவுத்துறை வரை பரவிக்கிடக்கும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினோம். புகைப்படக்கருவி எப்படி இயங்குகிறது, அதன் அடிப்படைத் தத்துவம் என்ன? அது எப்படி ஒளிப்பதிவுத் துறைக்கு அடிப்படையாக இருக்கிறது என்று துவங்கி, இன்றைய நவீன டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக் கொடுத்தோம். மேலும் தமிழ் மற்றும் இந்திய திரைத்துறையில் பயன்பாட்டிலிருக்கும் கேமராக்கள் யாவை, அவற்றிற்கிடையே இருக்கும் வித்தியாசங்கள், எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப்பற்றியும் பேசினோம்.

பின்பு, ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்திலிருக்கும் சில ஆதார விதிகளையும், பல்வேறு ஒளியமைப்பு விதிகளையும் தியரி வகுப்பாக அறிமுகப்படுத்தினோம். கலந்துக்கொண்டவர்கள் மிக ஆர்வமாக பல கேள்விகளை கேட்டது மகிழ்ச்சியைத் தந்தது. கேள்விகளும் அதற்கான பதில்களும் என்று அன்றைய நாள் மிக சுவாரசியமாகக் கழிந்தது.

இரண்டாம் நாள், Practical வகுப்பாக நடத்த முடிவு செய்திருந்தோம். அதன் படி.. RED EPIC Camera, Alura Zoom, Ultra Prime Lens  போன்றவற்றையும், சில விளக்குகள் (Lights) மற்றும் அதற்குத் தேவையான துணை உபகரணங்களையும் வரவழைத்திருந்தோம். முதல் நாளே ஒளியமைப்பு முறைகளைப்பற்றி பேசியிருந்ததனால், இப்போது அதை எப்படி நடைமுறையில் செயல்படுத்துவது என்று செய்முறை விளக்கமாக அமைத்துக்கொண்டோம். ஒளியமைப்பு செய்யும் போது கவனிக்க வேண்டியவை, ஒளியமைப்பில் இருக்கும் சிக்கல்கள் அவற்றிற்கான தீர்வு, வெவ்வேறு ஒளியமைப்பு முறைகள் என பலவற்றை பேசினோம். செய்துப்பார்த்தோம். அவற்றை கேமராவில் பதிவு செய்து கொண்டோம்.

பின்பு, அவற்றை எப்படி படத்தொகுப்புக்கு எடுத்துச் செல்வது. படத்தொகுப்பு செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை என்ன? படத்தொகுப்பு முடிந்த பிறகு, DI -க்கு எப்படி எடுத்துச் செல்வது, அதற்கு செய்ய வேண்டியவை என்னென்ன போன்றவற்றைப்பற்றிப் பார்த்தோம். பின்பு எப்படி வண்ண நிர்ணயித்தலை செய்வது என்பதையும் செய்துக்காட்டினோம்.

இரண்டு நாட்கள். கிட்டதட்ட 20 மணி நேரம். ஒளிப்பதிவு குறித்து பலவற்றைப் பார்த்தோம். பேசினோம். பகிர்ந்து கொண்டோம். உண்மைதான். இப்பயிற்சிப் பட்டறையை ஒரு பாடத்திட்டம் போல இல்லாமல், ஒளிப்பதிவு துறைச்சார்ந்த பலவற்றை பகிர்ந்துகொள்ளும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியைப்போல அமைத்துக்கொண்டோம். பலவற்றை அறிமுகப்படுத்தினோம். தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதைப் புரியவைத்தோம். ஒரு வழிகாட்டியாக இருக்க முயன்றோம். இவ்விரண்டு நாட்களில் பேசிவற்றைப்பற்றி தனித்தனி வகுப்புகளாக எடுக்கலாம். அத்தனை உள்ளடக்கம் கொண்டவை. 

ஆயினும், ஒன்று புலப்பட்டது. இத்தகையப் பயிற்சிக்கு, இந்த இரண்டு நாட்கள் போதவில்லை என்பதுதான் அது. மாணவர்கள் மட்டுமல்லாது, எங்கள் எல்லோருடைய கருத்தும் அதுதான். கலந்துகொண்டவர்கள் பலரும், இன்னும் விரிவான பாடங்களுடன் மீண்டும் இப்படியான ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துங்கள், நாட்களை அதிகப்படுத்துங்கள். நாங்கள் கலந்துகொள்கிறோம் என்றார்கள். ஆர்வம் கொண்டவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை எழுதி கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பார்க்கும்போது எங்களுக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்படுகிறது. அந்த ஆர்வம்தான் இப்படியான பயிற்சிப்பட்டறைகளை ஒரு தனி இயக்கமாக எடுத்துச்செல்லும், திட்டத்தை உருவாக்க வைத்தது எனில் அது மிகையாகாது.

புகைப்படம், ஒளியமைப்பு, படைப்பாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி தனித்தனியாக பயிற்சி பட்டறைகள் நடத்தக் கேட்டிருக்கிறார்கள். இவற்றை ஒவ்வொன்றாக நடத்த முடிவு செய்திருக்கிறோம். 

அதற்கான முதற்படியாக, இத்தளத்தை வடிவமைத்திருக்கிறோம். இதில், பாடங்கள் தனித்தனி வகுப்புகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விருப்பமான வகுப்பை தேர்ந்தெடுங்கள், உங்களைப்பற்றிய தகவல் மற்றும் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள் என்ற தகவலையும் கொடுங்கள். அதன் அடிப்படையில், வகுப்பையும், இடத்தையும் முடிவு செய்ய எங்களுக்கு ஏதுவாக இருக்கும். இது ஒருவிதமான கருத்துக் கணிப்புக்குத்தான். தேவையை அறிந்துக்கொள்ளுவதற்காகத்தான். விருப்பமான பிரிவு, கற்போர் எண்ணிக்கை, மற்றும் பொதுவான இடத்தேர்வுகள் இசைந்துவரும் பட்சத்தில், வகுப்புகளை விரைவில் துவக்க திட்டமிடலாம்.

உங்கள் பகுதியில் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புவர்களும், அப்படியான பயிற்சிப்பட்டறைகளை உங்கள் ஊரில் நடத்த ஏற்பாடு செய்ய முடிந்தவர்களும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி. 

பயிற்சிப் பட்டறைகளை

நான்கு பிரிவுகளாக பிரித்திருக்கிறோம்

திரைப்பட ஒளிப்பதிவு

திரைப்பட ஒளிப்பதிவின் ஆதார தொழில்நுட்பங்களையும், அதன் காட்சிமொழி, திரைமொழி மற்றும் டிஜிடல் ஒளிப்பதிவில் உள்ள சிறப்பம்சங்கள், அதன் இயல்புகள், சாதக பாதங்களைப் பற்றி விரிவான பாடங்களைக் கொண்டிருக்கும்.

காணொளிப்பதிவு

ஆவணப்படங்கள், குறும்படங்கள், விளம்பரப்படங்கள், திரைப்படம் என எதுவாக இருந்தாலும் அடிப்படை வீடியோ தொழில்நுட்பம் ஒன்றுதான். இவ்வகுப்பு வீடியோ துறைச்சார்ந்த உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள உதவும்.

புகைப்படக்கலை

டிஜிட்டல் கேமராவின் பாகங்கள், அது செயல்படும் விதம், அதன் அடிப்படைவிதிகள், துணைக்கருவிகள் ஆகியவற்றில் துவங்கி ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனைப்போல ஒளியை, சூழலைப் புரிந்துகொண்டு ஒருசிறந்த புகைப்படத்தைப் பதிவுசெய்வது எப்படி என்ற புரிதலை, அறிவை இவ்வகுப்பு கொடுக்கும்.

ஒளியமைப்பு

இயற்கை ஒளியினைப் புரிந்துகொள்வது, பயன்படுத்துவது போன்றவற்றில் பயிற்சி, ஒளியமைப்பு எப்படி காட்சியின் உணர்வுகளைப் பாதிக்கிறது எனும் பாடம், ஒளியின் நுணுக்கங்களையும், கூறுகளையும் புரிந்துகொள்தல் என ஆழ்ந்த நோக்குடன் இப்பிரிவின் பாடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை

திரைப்பட ஒளிப்பதிவு:

திரைப்பட ஒளிப்பதிவின் ஆதார தொழில்நுட்பங்களையும், காட்சி அழகியலையும் அடித்தளமாகக் கொண்ட பகுதி இது. காட்சிமொழி, திரைமொழி மற்றும் டிஜிடல் ஒளிப்பதிவில் உள்ள சிறப்பம்சங்கள், அதன் இயல்புகள், சாதக பாதங்கள் மற்றும் சிக்கல்களையும், ஒளிப்பதிவின் பிற அடிப்படைப் பாடங்களையும், ஒளிப்பதிவுக்குப் பிறகான பிற்தயாரிப்புப்பணிகள் குறித்த அறிமுகத்தையும் இப்பகுதி விரிவாக பாடங்களைக் கொண்டிருக்கும். பயிற்சி வகுப்புகளின் மூலமாக பல்வகை டிஜிடல் பதிவு வகைகளில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் குறைகள், காட்சிச் சட்டக அமைப்பு, காட்சித்துண்டுகளின் வகைகள், கேமரா நகர்வுகள், ஒளி மற்றும் ஒளிச்சேர்க்கைகளின் கட்டுப்பாடு போன்றவற்றைக் கற்கலாம்.

காணொளிப் பயிற்சிப் பட்டறை

காணொளிப்பதிவு:

புகைப்படங்களை எடுப்பதைப்போலவே காணொளிகளை உருவாக்குவது தனித்தன்மை வாய்ந்த ஒரு கலையாகும். வாழ்வின் அற்புதக் கணங்களை நிரந்தரமாக உறைய செய்திடும் புகைப்படங்கள் ஒருபுறமென்றால், காட்சி வடிவமாக, நகர்வுகலையாக நிகழ்வுகளை பதிவுசெய்திடும் ‘விடியோ’ தொழில்நுட்பம்  ஒருபுறம் நின்று, அத்தராசை சமன் செய்கிறது. இரண்டு துறைகளும் ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை. இரண்டுக்கும் அடிப்படை ஒன்றேயானாலும், வித்தியாசங்கள் பல இருக்கின்றன. இரண்டு துறைக்குமான பலம், பலவீனம், தகுதி, எல்லை என்பவை உண்டு. புகைப்படத்துறையில் வல்லவர், விடியோ துறையில் வல்லவராக இருப்பார் என்று சொல்லுவதற்கில்லை. காரணம், இத்துறைக்கென சில நுட்பங்கள் உண்டு. ஒளியமைப்பு, கேமரா நகர்வு, தொடர்ந்து இயக்கத்திலிருக்கும் தன்மை போன்றவை இதன் விதிகளை நிர்ணயிக்கின்றன. அவற்றைப்பற்றிய முழுமையான அறிவும் தெளிவும் இருந்தால் மட்டுமே, இத்துறையில் மிளிர முடியும். ஆவணப்படங்கள், குறும்படங்கள், விளம்பரப்படங்கள், திரைப்படம் என எதுவாக இருந்தாலும் அடிப்படை வீடியோ தொழில்நுட்பம் ஒன்றுதான். ஒரு வீடியோ கேமராவை எப்படி கையாள்வது? அதன் பாகங்கள் என்ன? ஒளியைப் புரிந்துக்கொள்வது, அதை பயன்படுத்துவது என கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. இவ்வகுப்பு விடியோ துறைச் சார்ந்த உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். 


புகைப்படப் பயிற்சிப்பட்டறைகள்

புகைப்படக்கலை- அறிமுகம்:

புகைப்படம் எடுக்க யாருக்குத்தான் விரும்பமிருக்காது? தொழில்நுட்பம் நம் அனைவரது கையிலும் ஒரு கேமராவைக் கொடுத்துவிட்டது. அது கைபேசியாக, கையடக்கக் கேமராவாக, DSLR கேமராவாக நம்மிடம் வந்து சேர்ந்துவிட்டது. ஆனால், அதை எப்படிக் கையாளுவது? ஒரு அற்புத கணத்தை சரியான விதத்தில் பதிவு செய்வது எப்படி? ஒரு சிறப்பான புகைப்படத்தை வெறும் கருவிகள் கொண்டு படைத்திட முடியாது. அதைக் கையாளும் மனிதனின் அறிவும் கலைத்தன்மையுமே அப்படங்களுக்கு உயிர்ப்பைத் தருகின்றன.ஒரு தொழில்நுட்பத்தின்  கூறுகளை, அதன் விதிகளை, அதன் நுட்பங்களை, அதன் சாத்தியங்களை முறையாகக் கற்றுக்கொள்வதும், அதை நடைமுறையில் பரீட்சித்து, அனுபவ அறிவை வளர்ப்பதுமே ஒரு முழுமையான கலைஞனை வளர்த்தெடுக்கும். அவ்வகையில் இவ்வகுப்பு, புகைப்படத்துறை குறித்தான உங்களின் அடிப்படை அறிவை வளர்த்தெடுக்க உதவும். 

 

உங்கள் பயணங்கள், நண்பர்கள்/உறவினர்களோடானான கணங்கள், வீட்டில் நிகழும் சுபகாரியங்கள், விழாக்கள் என எல்லாவற்றிலும், பதிந்து வைக்கக் கூடிய அற்புத கணங்கள் இருக்கவே செய்யும். அவற்றை உங்களிடமிருக்கும் கேமராவைக்கொண்டு (Mobile Phone Camera / Compact Camera / DSLR Camera) முறையாக, சிறப்பாக பதிவுசெய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளலாம். 

 

டிஜிட்டல் கேமராவின் பாகங்கள்,அது செயல்படும் விதம், அதன் அடிப்படைவிதிகள், துணைக்கருவிகள் ஆகியவற்றில் துவங்கி ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனைப் போல ஒளியை, சூழலைப் புரிந்துகொண்டு ஒருசிறந்த புகைப்படத்தைப் பதிவுசெய்வது எப்படி என்ற புரிதலை,அறிவை இவ்வகுப்பு கொடுக்கும்.  


புகைப்படக்கலை- திருமணப்பதிவு:

நமது வாழ்வின் வசந்தங்களில் ஒன்று திருமணம்.நம் அனைவரின் வாழ்விலும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாய் திருமணம் அமைந்துவிடுகிறது. புதிய உறவு இணைந்திடும் அந்நாட்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் நிறைந்தது. மணமக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்திலும் பரவசமும்,கொண்டாட்டமும் நிறைந்திருக்கும் அக்கணங்களை காலத்தால் அழியா பதிவாக்கிடுவதில் புகைப்படங்களும், காணொளிகளும் முக்கிய பங்காற்றுகின்றன. அத்தகைய முக்கிய நிகழ்வை முறையாகப் பதிவு செய்திட தேவையான அடிப்படை அறிவை இவ்வகுப்பு கொடுக்கும்.

கேமரா, ஃபிளாஷ், துணைக்கருவிகள் எனத் துவங்கி புகைப்படத்துறையின் மொழி, கலைத்தன்மை, வழிமுறைகள் போன்றவற்றைக் கற்றுக்கொள்வதன் மூலம், அம்முக்கிய நிகழ்வின் பிரத்தியேகக் கணங்களை ஒரு தேர்ந்த கலைஞனாக நின்று, பதிவுசெய்திட உங்களால் முடியும். மேலும், எடுக்கப்பட்ட எண்ணற்ற புகைப்படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கவும், மெருகூட்டவும், அதற்கு உதவும் மென்பொருட்களான Lightroom & Photoshop போன்றவற்றை முறையாகப் பயன்படுத்துவதற்கான பயிற்சியையும் பெறுவீர்கள்.


புகைப்படக்கலை- விளம்பரப்பதிவு:

வணிக மயமான இன்றைய உலகில் விளம்பரங்கள் இல்லாத வணிகமென்று ஏதும் உண்டா என்ன.?! பத்திரிக்கைகளில் துவங்கி தொலைக்காட்சி வரைக்கும்  விளம்பரங்களே முன்நிற்கின்றன. புகைப்படக்கலையின் பிரிவுகளில் ஒன்று மாடலிங் புகைப்படப்பிரிவு. அழகை முன்நிறுத்தும் இத்துறைக்கென பிரத்தியேக கலை நுணுக்கங்கள் பல உண்டு. உடை, சிகை அலங்காரத்தில் துவங்கி, அரங்கவடிவமைப்பு,வண்ணத்தேர்வு, ஒளியமைப்பு, கம்போசிஷன் என பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. பல்துறை வல்லுநர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டிய சூழலில், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செயலாற்றவேண்டும். இத்துறை சார்ந்த Preproduction, Shoot, Postproduction போன்றவற்றைப் பற்றிய ஒரு முழுமையான அறிவை இவ்வகுப்பு கொடுக்கும்.

புகைப்படப் பயணம்

பயணங்கள் மனித உணர்வுகளை மீட்டெடுக்கின்றன என்றொரு சொற்றொடர் உண்டு. உணர்வுகள் சார்ந்து இயங்கும் படைப்பாளிகளுக்கு அது இன்னும் பயன்தரவல்லது. துவக்கநிலை புகைப்படக்காரரோ, அல்லது கலாநிபுணரோ இந்தக் கல்வித்திட்டங்களின் ஒருபகுதியாக பயணங்களைக் குழுவாக நாம் மேற்கொள்ளலாம். மூன்றல்லது நான்கு நாட்களாக அமையவிருக்கும் பயணம் கொடைக்கானல், பெங்களூர், கோவா, லேலடாக் என எதை நோக்கியதாகவும் அமையலாம். பயணத்தின் பகுதிகளாக அனுபவப்பகிர்வுகள், நேரடிப்பயிற்சிகள் போன்றன அமையும். அழகான, அரிதான பயணத்தளங்களில் மனிதர்களை, நிலவமைப்பை, இயற்கையை, இரவை, நெருப்பை என ஏராள விஷயங்களை அதனதன் உணர்வுகளோடு படம்பிடிக்கக் கற்கலாம், படம்பிடித்து மகிழலாம், திறன் வளர்க்கலாம்.

ஒளியமைப்புப் பயிற்சிப்பட்டறைகள்

புகைப்படங்களுக்கான ஒளியமைப்பு:

புகைப்படக்கலை, காணொளிப்பதிவு, திரை ஒளிப்பதிவு போன்ற துறைகளில் ‘ஒளியமைப்பு’ என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும். இத்துறைகளில், ஒளியமைப்பு பற்றிய அறிவும், புரிதலும் தேர்ச்சியடையும் ஒவ்வொரு படியும், நிபுணத்துவத்தை நோக்கிய பயணத்தில் மேலும் ஒரு அடியாகும். இயற்கையான ஒளி, கீற்றொளி விளக்குகள் மற்றும் படப்பிடிப்புத்தள விளக்குகளைப் பயன்படுத்தி உட்புற, மற்றும் வெளிப்புற படப்பிடிப்புக்குத் தேவையான ஒளியமைப்புகளை, காட்சி மற்றும் கருப்பொருளுக்கேற்ப சிறப்புற எப்படி அமைப்பது என்பதான பாடங்கள் இப்பிரிவில் உள்ளன. இயற்கை ஒளியினைப் புரிந்துகொள்வது, பயன்படுத்துவது போன்றவற்றில் பயிற்சி, ஒளியமைப்பு எப்படி காட்சியின் உணர்வுகளைப் பாதிக்கிறது எனும் பாடம், ஒளியின் நுணுக்கங்களையும், கூறுகளையும் புரிந்துகொள்தல் என ஆழ்ந்த நோக்குடன் இப்பிரிவின் பாடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காணொளிப்பதிவுக்கான ஒளியமைப்பு:

அதிக பொருட்செலவு, நிறைய தொழில்நுட்பவல்லுநர்களின் பங்களிப்பு போன்றன இல்லாமல், ஏற்கனவே நம்மிடம் இருக்கும் எளிய வசதிகளைப் பயன்படுத்தியே சிறந்த குறும்படங்களை உருவாக்க எண்ணும் படைப்பாளிகள், எளிமையான, வேகமான அதேநேரம் கச்சிதமான ஒளியமைப்பை பயிற்சி வகுப்புகள் மூலமாக இந்தப்பிரிவில் கற்கலாம். எளிய பொருட்செலவிலும் ஒளியமைப்பில் பார்வையாளர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தவல்ல எளிய, சிற்சிறு குறிப்புகள், தந்திரங்களைக் கற்கலாம். ஒளி, ஒளிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவுக்கருவிகளின் நுணுக்கங்கள், உட்கூறுகள் பற்றிய முழுமையான பார்வையும் கிடைக்கும். ஒரு காட்சிக்கு, அதன் உணர்வுக்குத் தேவையான ஒளியமைப்புக்கு அவசியமானவை என்ன என்பதை புரிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால் இந்தப் பிரிவு உங்களுக்காகத்தான்.

கருத்து கணிப்பு படிவத்தை நிரப்புங்கள்

உங்களுக்கு விருப்பமான வகுப்பை தேர்ந்தெடுங்கள், உங்களைப்பற்றிய தகவல் மற்றும் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள் என்ற தகவலையும் கொடுங்கள். அதன் அடிப்படையில், வகுப்பையும், இடத்தையும் முடிவு செய்ய எங்களுக்கு ஏதுவாக இருக்கும்.

CONTACTS
Name: Vijay Armstrong
Email: vijayarmstrong@gmail.com
Phone: +91 98406 32922


Name: Gnanam Subramanian

Email: usgnanam@gmail.com

Phone: +91 99200 29901