இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாக இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.
கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். இம்முறை புகைப்படத்துறையை தவிர்த்து, முழுக்க முழுக்க ஒளிப்பதிவுத்துறையை மட்டும் எடுத்துக்கொண்டோம். வருபவர்கள் பெரும்பாலும் ஒளிப்பதிவுத்துறை சார்ந்து ஆர்வம் மட்டுமே கொண்டவர்கள், நேரடி அனுபவம் அற்றவர்கள் என்பதனால், இத்துறை சார்ந்த ஒரு முழுமையான அறிமுகத்தை அவர்களுக்குத் தருவதே ஆதார நோக்கம். எதை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது, எதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது, எதுவெல்லாம் இணைந்து ஒரு படைப்பை கொடுக்கின்றன, தொழில்நுட்பமும், கலையும் இணையும் அந்த அற்புதம் எப்படி நிகழ்கிறது, அதற்கான அடிப்படை தகுதி என்ன என்பதை புரிய வைக்க முயன்றோம்.
முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.
SHARE THIS PAGE!