மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ‘Centre for Film & Electronic Media Studies’ மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை நடத்தினோம். வழக்கமாக எங்களுடைய பயிற்சிப்பட்டறைக்கு வருபவர்கள் பல்துறைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இம்முறை திரைக்கலையை பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள் மட்டும். அதுவும் தெளிவான மாணவர்கள். அதனால்,அடிப்படையைத்தாண்டி,கொஞ்சம் அட்வான்ஸ் பாடங்களைப் பார்த்தோம். மற்றும் எங்களுடைய திரைத்துறை அனுபவம் பற்றி பேசினோம். இரண்டாம் நாள் முழுவதையும் திரைப்படங்களுக்கு ஒளியமைப்பது (Lighting) எப்படி என்பதையும், நம்மிடமிருக்கும் குறைந்த கருவிகளைக் கொண்டு எப்படி லைட்டிங் செய்வது என்பதைப்பற்றியும் பார்த்தோம். மற்றொரு சுவையான அனுபவம் இது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், உபகரணங்கள் எல்லாம் தேவையான அளவிற்கு இருக்கிறது. இரண்டு படபிடிப்புத் தளங்கள், இருபதற்கும் மேற்பட்ட எடிட்டிங் கணினிகள், VFX பிரிவு, ஒலிப்பதிவுக் கூடங்கள், DI தளங்கள் என நிறைவான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இங்கே சென்னையில் இருக்கும் தொழில்முறை ஸ்டியோக்களை விட, அதிக வசதிகளை கொண்டிருக்கிறது. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. அப்பகுதி மாணவர்கள் இவ்வசதிகளை முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். படிப்பிற்கான செலவும் குறைவுதான். அப்பகுதி மாணவர்கள் முயன்றால், மதுரையிலிருந்தே ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்கிவிட முடியும். அதற்கான அத்தனை வசதிகளையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது. மதுரையிலிருந்து ஒரு திரைப்படம் உருவாகும் காலம் அதிக தூரமில்லை என்று நம்பலாம்.
Centre for Film & Electronic Media Studies துறையின், துறைத்தலைவர் திரு.கர்ண மகாராஜா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அத்துறையைச்சார்ந்த திரு.ராஜவேல் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். நாங்கள் மதுரையில் இருந்த மூன்று நாட்களிலும் எங்களோடு இருந்து எங்களை நன்முறையில் கவனித்துக்கொண்ட நண்பர் திரு.ரகு காளிதாஸுக்கு அன்பும் நன்றியும்.
SHARE THIS PAGE!